சிந்தனைச் சாரல்
சமீபத்தில் வாசித்த புத்தகம் எது ?
நமக்கு நாமே ஒரு வினாவை கேட்டுக் கொள்வோம்.
நாம் சமீபத்தில் வாசித்த புத்தகம் எது ?
வாசித்ததால் நாம் அறிவை வளர்த்துக் கொண்டோமா?
உள்ளச் சுத்திகரிப்பை உணர்ந்தோமா?
புத்தகம் வாசிக்கவில்லை என்பதே பெரும்பான்மையினரின் பதிலாகும்.
ஏன்?
நேரம் இல்லை என்கிறோம்.
ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள் மூழ்கிப் போகிறோம்?
சிறிய தொகையைச் செலுத்தி, 24 மணி நேரமும் எது கிடைத்தாலும், அது தரமானதாக இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
Entertainment - பொழுது போக்கு
போக்குதல் என்பது நேரத்தை விரயமாக்குதல்.
Hobby - பொழுதாக்கம்
நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, தானே ஆர்வத்துடன் செயல்களில் ஈடுபட்டு, நொடிகளை ஆனந்த மயமாக்குதல். (Drawing, painting, playing music, gardening etc.)
நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, தானே ஆர்வத்துடன் செயல்களில் ஈடுபட்டு, நொடிகளை ஆனந்த மயமாக்குதல். (Drawing, painting, playing music, gardening etc.)
Entertainment என்பது Fast Food ஐ வாங்கி உண்பது போல - தற்காலிக சுவையும், பிற்காலத்தில் பக்க விளைவுகளால் பேரிழப்புகளும் ஏற்படும்.
(physical, mental, emotional
& financial imbalance)
Hobby என்பது இயற்கையோடு இயைந்து, அனைத்து வகை சத்துகளும் கிடைக்குமாறு, சுவையாக சமைத்து, பாட்டியும், அம்மாவும் அன்புடன் பக்குவமாக பரிமாறும் அறுசுவை உணவு போல - உடலுக்கு ஆரோக்கியமும், மனதிற்கு உற்சாகமும், புத்துணர்வும் உண்டாகும்.
மீண்டும், மீண்டும் forward செய்யப்படும் பகிர்வுகள் :
1. மாநில, இந்திய, உலக வழிபாட்டு ஸ்தலங்கள், அவற்றின் அனைத்து சிறப்புகள்
2. சித்த, மூலிகை, ஆயுர்வேத, இத்யாதி மருத்துவ முறைகள்
3. தனி மனிதர்களின் சிறப்புகளும், அவலங்களும்
4. தான் கண் விழித்திருக்கும்போது தானும், தன் குடும்பத்து உறுப்பினர்களும் செய்யும் அனைத்து செயல்களின் புகைப்படங்களும், வீடியோக்களும்
5. தன்னை மகிழ்விக்கும் அனைத்தும் உண்மையானவையே, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடியவையே என்ற உயர்ந்த எண்ணத்தில் அனைத்து குழுக்களுக்கும் பகிரும் உத்தம நோக்கம்
6. இறைவனின் நாமங்களை பத்து பேருக்கு பகிரக் கோருதல் (இலவச இணைப்பு போல அச்சுறுத்துமாறு எச்சரிக்கையும்...)
பக்க விளைவுகள் :
1. எழுத்துப் பிழைகளுடனும், இலக்கணப் பிழைகளுடனும் கூடிய வாக்கியங்கள்
2. ஆதாரமற்ற தகவல்கள்
3. தன் முனைப்பு மிக்கவர்களும், மனவலிமையற்ற மனிதர்களும் தன் கருத்துகளே சரியானவை என்று விவாதித்து காயப்படுத்தி, தானும் காயப்படுதல் - இது போதாதென்று இந்த ஒன்றுக்கும் உதவாத வெட்டிப்பேச்சை வேண்டியவர்களுடன் மீண்டும் ஆரம்பம் முதல் -அதே, அதே...பரோட்டா கதைதான்...ஆனால், இது நகைச்சுவை அல்ல...சோகம்
ஒரே தீர்வு: பல் துலக்க, குளிக்க, உடை உடுக்க, உணவு உண்ண, உறங்க என அத்தியாவசியத் தேவைகளுக்கே குறிப்பிட்ட நேரம் ஒதுக்கும் நாம் சமூக வலைதளங்களில் செலவாக்கும்/செலவழிக்கும் நேரங்களை பின்வருமாறு வரையறுப்போம் –
Busy யாக வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1 மணி நேரமும்,
ஓய்வாக உள்ளவர்கள் அதிக பட்சமாக 2 மணி நேரங்களும்,
சமூக வலைதளங்களில் மூழ்கி முத்தெடுப்பதே என் தலையாய கடமை, சமுதாயத்தின் மீது நான் கொண்ட அக்கறை, என் தேசப் பற்று, உலகின் மீது நான் கொண்ட நேசமும் என்று பறைசாற்றுபவர்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் மூழ்கி முத்தெடுக்கட்டும்...
முத்து எடுப்பவர்களின் குடும்பத்தினருக்கு இது சாபமாயின், எல்லாம் வல்ல பரம்பொருளே சாபத்தை வரமாக்கட்டும்...
-ஞானவதி அசோகன்.
பிழைத்துளி பிழைத்துளி
சிறு சிறு மழைத்துளி எப்படி பெரு வெள்ளமாக
பிரவாகமெடுத்து ஊரை அழிக்குமோ, அதுபோல, நாம் நமக்கு தெரிந்தே, மற்றவர்களுக்கு தெரியாது
என நினைத்து செய்யும் சிறு சிறு பிழைகள் எல்லாம் ஒரு நாள் பெரும் குற்றமாக விஸ்வரூபம்
எடுத்து நம்மை சித்திரவதை செய்து ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக உணரச் செய்து நம்மை
அழிக்கும்.
படிப்பு, பதவி, பணம் இவை மூன்றும் ஒருவரை செம்மைப்
படுத்துவதற்கே. ஆனால், இதை உணராதவர்கள் செல்வாக்கு, புகழ் இரண்டும் உழைப்பிற்கான உயர்வு
என்பதை மறந்து, அவற்றை போதை எனக் கருதி மீளா அடிமைகள் ஆகி விடுகிறார்கள். பின்பு அவற்றைக்
காத்துக் கொள்ள அற வழியிலிருந்து சற்றே விலகுகிறார்கள். அப்பொழுதே அவர்களின் மனசாட்சி
அவர்கள் செய்வது தவறு என்று புரியும்படி எச்சரிக்கை மணி அடிக்கும். ஆனால், அவர்கள்
தங்களுடைய அனுபவத்தில் கண்ட குற்றங்கள் புரிந்து தண்டனையிலிருந்து தப்பிப்பவர்களைப்
பார்த்து, எச்சரிக்கையை உதாசீனப் படுத்தி விடுவார்கள்.
இது தவறு என சுட்டிக்காட்டும் மனசாட்சியை ஒதுக்கி
விட்டு, தம் ஆறாம் அறிவால் மற்றவர் அறியாமல் எப்படி தவறுகள் செய்வது, செய்த தவறுகளை
எப்படி மற்றவர் அறியாமல் மறைப்பது என்பதற்கே தன் புத்தியைப் பயன்படுத்தி காலம் கழிகிறது.
சிறிது காலத்திற்கு பிறகு தவறுகளே பழகிப்போய்
விட்டதால், எப்படி தனி வீடுகள் பல மாடி அடுக்ககங்களாக மாறி விட்டனவோ, அதுபோல ஒன்றன்
மேல் ஒன்றாய் அடுக்கடுக்கான குற்றங்களாக உருவெடுக்கின்றன.
இப்படிப் பட்டவர்களின் வாழ்வில் ஏற்படும் அவலம்தான்
என்ன?
நேர்மையாக உழைத்து, அதற்கேற்ற ஊதியம் பெற்று,
அரசுக்கு வரி செலுத்தி, தேவையானவற்றை மட்டும் வாங்கி, திருப்தியுடன் வாழ்வது எப்படி
என்பதை அறியாமலே காலம் கழிக்கிறார்கள்.
உறவினைக்
காத்து, நட்புடன் பழகி, அவர்களின் சுகத்தின்போது தானும் பெருமகிழ்வடைந்து, அவர்களின்
துன்பத்தை தனதெனக் கருதி, பிரதிபலன் கருதாது காலத்தினாற் உதவி செய்து நிறைவுடன் வாழ்வது
எப்படி என்று உணராமலே கரையில்லா சுயநலச்சேற்றில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
உண்ணும் உணவு சரியானபடி செரித்து, படுத்தவுடன்
கண்களைத் தூக்கம் தழுவும் நிம்மதியான வாழ்க்கை என்னவென்றே இறுதிவரை தெரியாது இவர்களுக்கு.
சாந்தமும், சௌக்கியமும் சதிகாரர்களின் முகத்தில்
வழியாது. அகம்பாவத்தினாலும், பேராசயினாலும் கண்களில் குரோதமே கூத்தாடும். நிஜ முகத்தைக்
காட்டவோ, பார்க்கவோ தகுதியிழந்து, தானும் முகமூடி அணிந்து, தம்மைச் சுற்றி ஜால்ரா போடும்
முகமூடி வேஷதாரிகளுடனேயே இடைவேளை விடாத திரைப்படம் போல் இறுதிக்காட்சிவரை நடித்தே முடிப்பார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பிழைத்துளிக்கு
விமர்சனங்கள் வருகையிலேயே, துளியைத் துடைத்து, நல் வழிக்கு திரும்பி விட்டால், தண்டனையிலிருந்து
தப்பிக்கிறார்கள்.
சில பிழைகள் செய்த பிறகு கையும் களவுமாக இடையில் மாட்டிக் கொண்டவர்கள் தண்டனைக்கு உள்ளாகி
பாதி தப்பிக்கிறார்கள்.
ஆனால், அதி புத்திசாலித்தனத்துடன், நீல சாயம்
வெளுக்காமல், ஒரு வேளை சாயம் வெளுத்தாலும் முகமூடியைக் கழற்றாமல் இறுதிவரைத் தண்டனையிலிருந்து
தப்பித்தவர்கள் தம் இறுதி காலத்தில் பார்வை மங்கி, தோல் தொங்கி, பற்கள் உதிர்ந்து,
வாய் குழறி, சுவை மரத்து, செவி மட்டும் கூர்மையாக கேட்கும் அதிசய வரத்தைப் பெறுவார்கள்.
ஈடிலா சாமர்த்தியத்தால் தண்டனையிலிருந்து தப்பித்து
விட்டோம் என்ற இறுமாப்புடன் இருந்தவர்களுக்கு தாம் உயிரோடு இருப்பதே மற்றவர்களுக்கு
தண்டனை என்ற சாபத்தை உணரத் தொடங்வார்கள். உணரத் தொடங்கியவுடன் தம் முகமூடிகளைக் கழற்ற
முயல்வார்கள். அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருப்பதால் கழற்ற முடியாது. நிஜ முகங்களைக் காண
முடியாமல் தம் அகங்களை நோக்கிய பயணம் தொடரும்.
முழு நீள 3-டி திரைப்படமாய் கடந்து வந்த பாதை
மீண்டும் வரும். தாம் புரிந்த வஞ்சனைகள், சூழ்ச்சிகள், அடுத்தவரைக் குத்திக் கிழித்த
வார்த்தைகள் என்று மூன்று மணி நேர திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களாக மாறும் கொடுமைகள்
நடக்கும். ஒரு விதை விதைத்தால் எப்படி பல காய்கள் காய்க்கின்றனவோ, அது போல தாம் விதைத்தவை
அனைத்தும் பல அமில குண்டுகளாக அகத்தில் பாயும்.
அழவும் தெம்பின்றி துன்பத்தை அனுபவித்து,
அனுபவித்து இயற்கையிடம் மரணத்தை வேண்டும் நிலையை அடைவார்கள். அப்பொழுது அவர்களுக்கு
ஞானச்சுடர் தோன்றும். அதனால் ஆசை ஒன்று பிறக்கும். தாம் வாழும்போது தம் பிள்ளைகளுக்கு
பிழைகளையே கற்பித்தவர்கள் முதன் முதலாக அறத்தை போதிக்க வாய் திறந்து பேச முயல்வார்கள்.
ஒன்றும் புரியாது. பிள்ளைகள் அவர்களைத் தாண்டி பெரும் குற்றங்கள் புரிபவர்களாக இருப்பார்கள்.
இயலாமையும், ஏமாற்றமும், விரக்தியும் போட்டி போட்டுக் கொண்டு துன்புறுத்தும்.
நிலையில்லா வாழ்க்கை என்று நன்றாக தெரிந்தும்
எவ்வளவு ஆட்டம் ஆடியிருக்கிறோம் என்று நினைக்கையில் உணர்கிறார்கள்-
”பிழைகள்
புரியாமல் வாழ்பவர்களே வாழ்பவர்கள்,
பிழைகளுக்கு தண்டனை பெற்றவர்கள் பாதி தப்பித்தவர்கள்,
தப்பித்தவர்களே பெருந்தண்டனை பெற்றவர்கள்.”
-ஞானவதி அசோகன்.
ஆயிரத்தில் ஒருவன்
/ ஒருத்தி
ஆயிரத்தில் ஒருவனாகவோ, ஒருத்தியாகவோ தன் குழந்தை உயர்ந்துவிட வேண்டும் என்று
நினைக்கும் பெற்றோர்களே சற்றே கவனத்துடன் யோசியுங்கள்.
குழந்தை வளர, வளர குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்குவிக்கிறீர்களா?
தங்கள் குழந்தை பத்து ரேங்க்குக்குள் வரவில்லை என்றால் கூனிக் குறுகுகிறீர்கள?
பள்ளி ஆண்டு விழாக்களில் குழந்தை எந்த பரிசையும் வாங்கவில்லை என்றால் இயலாமையால்
எரிச்சல் அடைகிறீர்களா?
உறவினர் குடும்பங்களிலும், நட்பு வட்டாரத்திலும் உள்ள குழந்தைகளைப் பார்த்து
தங்கள் குழந்தையும் பாட்டு, கருவி இசை, கராத்தே, பரத நாட்டியம், மேற்கத்திய இசை மற்றும்
நடனம், செஸ், கிரிக்கெட், வரைதல் இத்யாதியில் வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டு
குழந்தையை பல வகுப்புகளுக்கு அனுப்புகிறீர்களா?
குழந்தைகள் பல திறமைகள் பெற்று, பரிசு மழையில் நனையவில்லை என்றால், எதற்கும்
லாயக்கற்ற குழந்தை என்று எண்ணி, எதிர் காலம் என்ன ஆகி விடுமோ என்ற பயத்தில் குழந்தையிடத்தில்
“இவற்றை செய்யலாம், இவற்றை செய்யக் கூடாது” என்று அறிவுரைகளை அள்ளி விடுகிறீர்களா?
மேற்குரிய வினாக்களுக்கு ‘ஆம்’ என்று தலையசைத்திருந்தால், சில கருத்துகளை அசை
போட்டு பாருங்கள்.
”எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே” என்றுதான் பாடல் வரிகள்
உள்ளன.
அதனால் குழந்தையை நல்லவனாக வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.
இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுங்கள். செடி, கொடி, மரங்களை வளர்க்கச் செய்யுங்கள். அனைத்து
உயிர்களிடத்தும் அன்பு பாராட்ட பழக்கப் படுத்துங்கள். வறுமையில் வாடுவோர்க்கு ஏதோ ஒரு
வகையில் உதவிக் கரம் நீட்டுவது நம் கடமையென உணர்த்துங்கள்.
இதை விடுத்து என் குழந்தை “ஆயிரத்தில் ஒருவன்/ஒருத்தி” என்று தாங்களாகவே முடிவு
செய்து கொண்டு, பள்ளிப் பாடங்களை மீண்டும், மீண்டும் மனப்பாடம் செய்ய வைத்து ஆண்டு
முழுதும் தேர்வுகள் எழுதி அனைத்திலும் 90 க்கு மேல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று
வற்புறுத்தி குழந்தைகளின் சிறகுகளை வெட்டி கூண்டுக்குள் அடைக்காதீர்கள்.
படிப்பு என்பது சுமையல்ல, சுகம் என்பதை உணர்த்துங்கள். கடினமாகத் தோன்றும் பாடங்கள்
அடிப்படையிலிருந்து கற்று புரிந்து கொண்டால் எளிமையானது மட்டுமல்ல, இனிமையானதும் கூட
என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். மாணவர்களுடைய வயதிற்கேற்ப விளையாட்டின் மூலமாகவும்,
செயல் முறையின் மூலமும் ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தி வாசித்து, விவாதித்து அறிவை
விரிவாக்க வழி வகுத்துக் கொடுங்கள்.
பாடப் புத்தகங்களைத் தாண்டி மற்ற புத்தகங்களையும் வாசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி
என்ன என்பதை அனுபவிக்க வாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள். பல வகையான எழுத்தாளர்களின்,
அறிஞர்களின், விஞ்ஞானிகளின், பொருளாதார மற்றும் கணித மேதைகளின், மொழி வல்லுநர்களின்,
பயணிகளின் எழுத்துக்களை சுவாசித்து அறிவெனும் எல்லையில்லா வானில் சிறகடித்து பறக்க
விடுங்கள். அனுபவமெனும் ஆழ் கடலில் ஆனந்தமாய் நீந்த விடுங்கள்.
பெற்றோர்களே! குழந்தை நமது சொத்து அல்ல, ஆன்மா…
அதனால், அதை கூண்டுப் பறவையாய் அடைத்து வைக்காதீர்கள், கூட்டுப் பறவையாய் வாழ
விடுங்கள். சவால்கள் வரும். குழந்தை எதிர் கொள்ளும். அப்படி இயற்கையோடு இசைந்து வளரும்
குழந்தைகள் ஆயிரம் என்ற எண்ணுக்குள் அகப்படாமல் ஓங்கி உயர்ந்து உலகை அளப்பார்கள். புகழின்
உச்சிக்கு சென்றாலும் தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல், புல் தரையில் கால் பதித்து
நடக்கும் சுகத்தை விட மாட்டார்கள். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தான் ஒரு துளி என்பதை
மறவாமல் எளிமையாய் வாழ்ந்து இனிமயை பரப்புவார்கள்.
-ஞானவதி அசோகன்.
நகைத்திடு…நகர்ந்திடு…
நம் வாழ்வில் மூன்று வகையான மனிதர்களை அன்றாடம் சந்தித்துக்கொண்டே வருவோம்.
முதல் வகையினர் - நம்மை விட அறிவு, அந்தஸ்தில் அதிகமாகவும், பண்பில் குறைந்தவர்களாகவும்
இருப்பார்கள். நாம் அவர்களை ஏதாவது ஒரு வகையில் முந்தி விடுவோமோ என்ற பயத்தில் அவர்கள்
அவ்வப்பொழுது, பலர் முன்னிலையில் நம்மை குறைத்துப் பேசி, தானும் நகைத்து, சுற்றி அவர்களுக்கு
ஜால்ரா போடுபவரையும் நகைக்க வைத்து மகிழ்வார்கள் . அம்மாதிரியான சமயங்களில், அவர்கள்
உதிர்க்கும் ஏளனச்சொற்களைக் கேட்டோ, அலட்சியமாக தோளை உயர்த்துவதைக் கண்டோ, தன்னை விட
நீ எந்த விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்பதுபோல் கண்களில் வழியும் கர்வத்தைக் கண்டோ,
அதற்கெல்லாம் உச்சபட்சமாக நம்மைச் சேர்ந்தவர்களும் மௌனம் சாதிப்பதை உணர்ந்தோ கவலைப்
படக் கூடாது. கண்ணீர்த்துளி ஒன்றையும் வீணாக்கி விடக்கூடாது. நாம் காயப்படும் அளவிற்கு
அவர்களுக்கு தகுதியில்லை. அப்பொழுது,
ஆடும் வரை ஆடட்டும் என்று சிறிதாய் நகைத்திடு…
மனதளவில் அவர்களை விட்டு நகர்ந்திடு…
இரண்டாம் வகையினர் – அந்தஸ்தில் நம்மை விட உயர்ந்தவராகவும், அறிவிலும், பண்பிலும் நம்மை விட குறைவாகவும் இருப்பார்கள்.
அவர்கள் பொருளாதார அந்தஸ்து மிக்கவர்களுக்கு மட்டுமே தங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும்
இடம் அளிப்பார்கள். நம்மைத் தேவைக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, வேலை முடிந்தவுடன்
தூக்கி எறிவார்கள். அவர்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். மீண்டும் தேவை ஏற்படும்போது
நம்மை எந்த கூச்சமுமின்றி பயன் படுத்தி தூக்கி எறிவார்கள். அவர்களை விட்டு நாம் விலக
முடியாத தர்ம சங்கடத்தில் நாம் இருப்போம். அவ்வகை மனிதர்கள் நம் வினைப் பயன்களைப் போக்குவதற்காக
நமக்கு கடவுள் அளித்த வரங்கள். அதனால் அவ்வப்பொழுது,
அவர்களால் இடுக்கண் வருங்கால் நகைத்திடு...
அவர்களை மன்னித்துவிட்டு சற்றே நகர்ந்திடு…
மூன்றாம் வகையினர் – அறிவிலும், அந்தஸ்திலும் நம்மை விட உயர்ந்தவரோ, குறைந்தவரோ,
எப்படியிருந்தாலும், பண்பில் நமக்கு இணையானவராய் இருந்தால், நம் உள்ளத்துக்கு உகந்தவராய்,
அன்பு பாராட்டி, சிநேகித உணர்வோடு, நம்மைப் பரிகசித்து நம்மையும் நகைக்க வைத்து தானும்
நகைப்பார்கள். அது நம்முள் உற்சாகத்தை ஊற்றாகப் பெருக்கெடுக்கச் செய்யும். அவர்களுடன்
எப்பொழுதும்,
மனதார மகிழ்ச்சியில் நகைத்திடு…
மனதில் அவர்களை நோக்கி நகர்ந்திடு…
நாம் காயப்படுபவர்களாக இல்லாமல், நாமே அடுத்தவர்களை காயப் படுத்துபவராய் இருந்தால், நம் மனதை சுத்திகரிப்பு செய்து இனி வரும் காலங்களில், தேள், பாம்பு போல் வார்த்தைகளைக் கொட்டாமல், குளிர்விக்கும் மழைத்துளியாய் வார்த்தைகளைத் தூவுவோம்...
(பின் குறிப்பு : ஐயம் என்ற பெயரில் என்னிடம் வினா ஒன்றை எழுப்பி, கடைசிப்பத்தியை இணைக்கச் செய்த நட்பிற்கு நன்றி ! )
நாம் காயப்படுபவர்களாக இல்லாமல், நாமே அடுத்தவர்களை காயப் படுத்துபவராய் இருந்தால், நம் மனதை சுத்திகரிப்பு செய்து இனி வரும் காலங்களில், தேள், பாம்பு போல் வார்த்தைகளைக் கொட்டாமல், குளிர்விக்கும் மழைத்துளியாய் வார்த்தைகளைத் தூவுவோம்...
(பின் குறிப்பு : ஐயம் என்ற பெயரில் என்னிடம் வினா ஒன்றை எழுப்பி, கடைசிப்பத்தியை இணைக்கச் செய்த நட்பிற்கு நன்றி ! )
-முனைவர் ஞானவதி அசோகன்.